தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசமைப்பு சார்ந்த உரிமைகளை எமது அரசு கண்டிப்பாகப் பெற்றுக்கொடுக்கும்.

அத்துடன், இந்த அரசாங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுடன் செயற்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட வடுக்களுக்கும் பாதிப்புகளுக்கும் இன்றளவிலும் முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இன்றும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கில் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பல இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கான வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை அவரிடமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் எமது அரசு உறுதியாகவுள்ளது. ஒருவேளை, தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில காணிகளை விடுவிக்க முடியாமல்போகும் பட்சத்தில், அக்காணிகளுக்குச் சொந்தமானவர்களுக்குப் பொருத்தமான மாற்று நிலங்களோ அல்லது உரிய இழப்பீடோ வழங்கப்படும்.

அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் ஊடாகத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து எமது அரசு தீவிர கரிசனை கொண்டுள்ளது.

வெறும் சம்பள அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை முழுமையாக மேம்படுத்திவிட முடியாது. எனவே, அவர்களுக்கு முறையான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக விசேட பொறிமுறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசமைப்பு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்ராயம் கிடையாது.

எனவே தான், நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் என்பது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு விரிவான செயற்பாடாகும்.

எனவே, இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரைவு பற்றி அமைச்சரவையில் இதுவரை எந்தவித பேச்சுகளும் இடம்பெறவில்லை என்பதுடன், அது குறித்து இனிவரும் காலங்களில் முறையான தீர்மானங்கள் எட்டப்படும் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!