ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி ‘Deepfake’ காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையவழியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகளுக்காகவே இவ்வாறான போலி காணொளிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறிப்பிட்ட சில திட்டங்களில் பண முதலீடு செய்யுமாறும், அதனூடாக அதிக இலாபம் பெறலாம் என்றும் மக்களை ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இக்காணொளிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தங்களுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி, விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனைய முக்கிய ஆளுமைகளின் உருவங்களும் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான போலி காணொளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிகளுடன், பார்வையாளர்களை ஏமாற்றும் வகையிலான இணையத்தள இணைப்புகளும் (Links) இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த இணைப்புகள் தனிப்பட்ட தரவுகளையும் பணத்தையும் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
எனவே, இணையப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான இணைப்புகளைப் பின்தொடர வேண்டாம் என்றும், தங்களின் தனிப்பட்ட இரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
