லண்டன் வெம்ப்லியில் பிரம்மாண்ட ‘இராமாயண’ இசைநாடகம்: சீதையாக இலங்கை வம்சாவளி பெண் பவித்ரா அறிமுகம்!

லண்டன்: ஈழத்துத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த இளம் நடிகை பவித்ரா கணநாதன், லண்டன் வெம்ப்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசைநாடகமான “Diwali Story: The Journey of Ram – A Musical” நிகழ்ச்சியில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தனது தொழில்முறை நடிப்புப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

19 வயதான நடிகை, எழுத்தாளர், பாரதநாட்டியக் கலைஞர் மற்றும் பல்கலைக்கழக மாணவியான பவித்ரா, எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை OVO Arena Wembley அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சீதையாக மேடையேறுகிறார்.

இந்த இசைநாடகத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் கிரண் கானனுடன் பவித்ரா இணைந்து நடிக்கவுள்ளார். தொழில்முறை நடிகர்களுடன் சுமார் 100 சமூக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களும் இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பில் பங்கேற்கின்றனர்.

2025ஆம் ஆண்டு Royal Albert Hall அரங்கில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில் நடைபெற்ற வெற்றிகரமான அரங்கேற்றத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டு புதிய காட்சிகள் மற்றும் அசல் இசைப் படைப்புகளுடன் நிகழ்ச்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஐந்து வயதில் தொடங்கிய நடிப்புப் பயணம்

ஐந்து வயதில் The Little Mermaid மேடைநாடகத்தில் உர்சுலா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பவித்ராவின் நடிப்புப் பயணம் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகளில் National Youth Theatre, Rose Theatre உள்ளிட்ட முன்னணி நாடக அமைப்புகளுடன் இணைந்து பயிற்சியும் மேடை அனுபவமும் பெற்றுள்ளார்.

தற்போது Collective Acting Studioவில் நடிப்புப் பயிற்சியைத் தொடர்ந்துவரும் அவர், 2024ஆம் ஆண்டு National Iris Breuer Writing Award விருதையும் பெற்றுள்ளார்.

நடிப்புடன் மட்டுமன்றி பாரம்பரியக் கலைகளிலும் சிறந்து விளங்கும் பவித்ரா, ஏழாவது வயதில் தனது அத்தை மீனா இளங்குமரனிடம் பாரதநாட்டியம் கற்க ஆரம்பித்தார். தனது பாரதநாட்டிய அரங்கேற்றத்தை 2025 மார்ச் மாதம் நிறைவு செய்த அவர், 12 வயதிலிருந்து கர்நாடக சங்கீதத்திலும் பயிற்சி பெற்று வருகிறார்.

“சீதையாக நடிப்பது எனக்கு மிகவும் அர்த்தமிக்கது”

சீதைக்கும் ஈழத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து பவித்ரா கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒரு இளம் பெண்ணாக சீதையின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு மிகவும் அர்த்தமிக்கதாக உள்ளது. அவரது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான ஒரு பகுதி ஈழத்தில் நடைபெறுகிறது. ஈழத்தில் நிலப்பரப்பு, வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் இராமாயணத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன.

“சீதையாக நடிப்பதன் மூலம் அந்தத் தொடர்பை மேலும் ஆராய்வதுடன், காலத்தைக் கடந்த இந்தக் கதையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது,” என்றார்.

புதிய தலைமுறைக்கான இராமாயணக் கதை

சமகால பிரித்தானிய குடும்பம் ஒன்றின் பின்னணியில் இந்த இசைநாடகம் ஆரம்பமாகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லவ்(Luv) என்ற இளைஞனுக்கு அவரது தாத்தா மற்றும் பாட்டி, ராமர் மற்றும் சீதையின் கதையின் ஆழமான அர்த்தத்தை எடுத்துரைப்பதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

நாடுகடத்தல், தியாகம், கடமை, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் கடினமான தீர்மானங்கள் உள்ளிட்ட கருப்பொருட்களை மையப்படுத்தும் இந்த இசைநாடகம், இராமாயணத்தை இன்றைய தலைமுறையினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் மேடையேற்றுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான அசல் பாடல்களையும் இசையையும் இந்திய இசையமைப்பாளர் ராகுல் ரணடே உருவாக்கியுள்ளார்.

பிரபல இந்திய பின்னணிப் பாடகியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கவிதா கிருஷ்ணமூர்த்தியும் புதிய இசைத்தொகுப்புக்கு பங்களித்துள்ளார்.

இந்த ஆண்டுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அங்கத்தில் தீபாவளியின் ஐந்து நாட்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் இராமாயணத்தின் விழுமியங்கள் இன்றைய குடும்ப மரபுகளில் ஏற்படுத்திவரும் தாக்கம் என்பனவும் எடுத்துரைக்கப்படவுள்ளன.

இசைநாடகத்தை சமீர் பாம்ரா இயக்குவதுடன் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Sanatan Events Ltd, The Palan Foundation மற்றும் Golden Tours ஆகியவற்றின் கூட்டாண்மையில் நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது.

“Diwali Story: The Journey of Ram – A Musical” இசைநாடகம் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை OVO Arena Wembley அரங்கில் நடைபெறவுள்ளது. அன்று மாலை 4.30 மணிக்கு அரங்கின் கதவுகள் திறக்கப்படுவதுடன், மாலை 6.15 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!