திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(27) லண்டனில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில், பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 Downing Street அமைந்துள்ள வைட்ஹால் பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் தேசிய உரிமைகள் தொடர்பான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு நீராகாரம் உட்கொள்ளாமல் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபனை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற நிகழ்வில், பிரித்தானியாவின் பல பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, மாவீரர் லெப்டினன்ட் கேணல் கோபி அவர்களின் மகளான டிலானி நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்.









திலீபனின் 1987ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நிகழ்வில் அடையாள உண்ணாவிரதமும் இடம்பெற்றது.
மாலை நிகழ்வின் நிறைவில் அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்தும் நினைவுகூர்ந்தனர்.
