முகநூல் மற்றும் வட்ஸ்அப் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த 47 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் இலங்கை காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை ஊடகப் பிரிவு இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கும் வரை சந்தேகநபரைக் கைது செய்யக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்மாந்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த குறித்த சந்தேகநபரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னதாக காவல்துறையினரால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தமக்கு அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் காவல்துறை கோரியுள்ளது.
அத்துடன், முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்துடன் இந்தத் தெளிவுபடுத்தலையும் வெளியிடுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு முன்னர் விடுக்கப்பட்ட பொதுமக்களுக்கான கோரிக்கைக்குப் பதிலாக இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
