கனடா, ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி லோகன் கணபதி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

நீண்டகால நட்புறவின் அடிப்படையில் அமைந்த இச்சந்திப்பில், இலங்கையின் மாகாண சபை ஆட்சி முறைமைக்கும் கனடாவின் மாகாண ஆட்சி முறைமைக்கும் இடையிலான ஒப்பீடு மற்றும் அதிகாரப் பகிர்வின் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கனடாவின் கூட்டாட்சி முறைமையின் கீழ் மாகாணங்கள் அனுபவிக்கும் அரசியலமைப்பு ரீதியான சட்டவாக்கச் சுதந்திரம், நிதி அதிகாரங்கள் மற்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களின் நடைமுறை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, கனடாவில் வாழும் தமிழ் மக்களின் சமூக, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதில் லோகன் கணபதி ஆற்றிய பங்களிப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நினைவுகூர்ந்து பாராட்டினார்.
குறிப்பாக, கனடாவின் மார்கம் பகுதியில் ‘வன்னி வீதி’ எனப் பெயரிடப்பட்டமைக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். ஈழத்தமிழர்களின் வரலாறு மற்றும் போராட்ட நினைவுகளுடன் பிணைந்த வன்னி நிலப்பரப்பின் அடையாளத்தை புலம்பெயர் சூழலில் நிலைநிறுத்தியமை முக்கியத்துவம் வாய்ந்தது என சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு கனடாவின் கூட்டாட்சி அனுபவங்களைப் புரிந்துகொள்வது பயனுள்ளதாக அமையும் என இரு தலைவர்களும் வலியுறுத்தியதுடன், இதுபோன்ற உரையாடல்கள் தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.
சந்திப்பின் நிறைவில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு, ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் நட்புறவின் அடையாளமாக நினைவுப் பரிசொன்றை வழங்கி கௌரவித்தார்.
