வடக்கு மாகாணத்தில் இராணுவம் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்திவருவதால், சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வட மாகாணத்துக்கு உட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு வட மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வட மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
வட மாகாண அழகக கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களின் எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம், விஷேட அதிரடிப்படை முகாம், சிவில் பாதுகாப்பு படையணி முகாம், பொலிஸ் நிலையம், சிறைச்சாலை ஆகிய பகுதிகளை அண்டிய அல்லது உள்ளடக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்படுகிறது. அதனால் எங்களது அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்களது கட்டுப்பாடுகளும் மீறப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
பல தடவைகள் அனைவருக்கும் கடிதம் மூலமாக சுட்டிக்காட்டியதோடு நேரடியாகவும் சந்தித்து கலந்துரையாடி குறித்த சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதற்கமைவாக யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள சில சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும், இன்றும் பல சிகை அலங்கரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் இராணுவம் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்திவருவதால், சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


