போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய 10 சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு பெஸ்டியன்; மாவத்தை பேருந்து நிலையத்தில் இந்த விசேட நடமாடும் ஆய்வகச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனையின் போது அங்கிருந்த நபர்கள் மற்றும் பணியிலிருந்த 56 சாரதிகள் உள்ளிட்டவர்கள் (சீரற்ற) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 10 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.
சோதனை நடவடிக்கைகள் நடைபெறுவதை அறிந்த சில சாரதிகள், பல்வேறு தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி அந்தப் பாதைகளைத் தவிர்த்துச் செல்லவும், சோதனையிலிருந்து தப்பிக்கவும் முயற்சித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பொதுமக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், பரிசோதிக்கப்பட்ட 56 பேரில் 10 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார்.
சாரதிகள் போதையில் வாகனம் ஓட்டுவதை அவதானித்தால் பயணிகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பேருந்து உரிமையாளர்கள் தமது ஊழியர்களின் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட 10 சாரதிகளுக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திடீர் சோதனைகள், இனிவரும் காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முன்னறிவிப்பின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
