ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்:மனோ கணேசன்

”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் நடக்க காரணமாக அமைந்து விட்டது.

இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு கோருகின்றேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பிலும் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!