அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, இந்தியா தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய மீண்டும் ரஷ்யாவை நோக்கித் திரும்பியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துத் தடைகளால் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு புதுடெல்லி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தங்களுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்திருந்தது.
எனினும், தற்போதைய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, ரஷ்யாவுடனான எரிசக்தி உறவை மீண்டும் பலப்படுத்த இந்தியா முற்பட்டுள்ளது.
இதன்படி, ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயின் அளவை அதிகரிக்கவும், நீண்ட காலத்திற்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து நேரடியாக எரிவாயுவை கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா இந்த அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
