தொடர்ச்சியான ஆதரவு, சர்வதேச நாணய நிதிய அதிகாரி கீதா கோபிநாத்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று திங்கட்கிழமை (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கு அண்மையில் நிதி நெருக்கடியிலிருந்து மீள, வழிகாட்டிய சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா அண்மையில் விதித்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதம் அமெரிக்காவிற்குச் ஏற்றுமதி செய்யப்படுவதால், அவ்வாறு வரி அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் குறிப்பிட்டார்.

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த சவால்களை செயற்திறன் மிக்க வகையில் முகாமைத்துவம் செய்வதற்கும் அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக உறவு, குறிப்பாக இலங்கையின் 23% ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அனுமதி வழங்கும் GSP+ வர்த்தகச் சலுகை பற்றியும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டன.

முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஆட்சி மக்களை மையமாகக் கொண்டது என்றும், மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தனக்குக் கிடைத்த அமோக வரவேற்புக்கு திருமதி கோபிநாத் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டிலும் அரசாங்கத்திற்குக் கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, அத்தியாவசிய மறுசீரமைப்புகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அடைந்த பொருளாதார வளர்ச்சியையும், மிக அதிக பணவீக்க விகிதத்திலிருந்து பணவீக்க விகிதம் குறைந்ததையும் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பாராட்டினார்.

அதேபோன்று, அரச நிர்வாக மறுசீரமைப்புகளில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகளை நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்சி செயல்பாட்டில், சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருக்கும் என்று திருமதி கோபிநாத் உறுதியளித்தார்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!