இந்தோனேசிய பாலி தீவில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பிரஜையின் இதயம் காணாமல் போன விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் அண்மையில் பாலியில் உள்ள ஒரு தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் ஹாடோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சுமார் 4 வாரங்களுக்குப் பின் அவரது உடல் அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் இறுதிச் சடங்கிற்கு 2 நாட்களுக்கு முன்னதாக, அவுஸ்திரேலியாவில் இரண்டாவது முறையாக அவருக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் இதயம் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவுஸ்திரேலிய காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.