இனவாதத்திற்கு இடமில்லை!சுதந்திர தினத்தில் ஜனாதிபதி அநுரவின் சூளுரை!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா இன்று (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேசத்திற்கு ஆற்றிய உரையில், கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“அறியாமைக்குப் பதிலாக அறிவையும், பழைய தப்பெண்ணங்களுக்குப் பதிலாக முன்னேற்றத்தையும், பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையையும் கொண்ட புதிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்கான புரட்சிகரமான பொறுப்பை ஏற்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.

133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய எமது முன்னோர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.

அவர்களின் தியாகத்தால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது எமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது முன்னோர்கள் கொண்டிருந்த உயரிய தொழில்நுட்ப அறிவையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளாதாரப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பலம் எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எமது அகராதியிலுள்ள மிகவும் அவலட்சணமான இரண்டு சொற்கள் ‘இனவாதம்’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகும் என்றார்.

“நாம் பிளவுபட்டால் எமது பலம் குன்றிவிடும். எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு,” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் போதே ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருள் அர்த்தமுள்ளதாக மாறும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் இலங்கை ஒரு கௌரவமான நாடாகத் திகழ வேண்டும் எனவும், சட்டமும் ஒழுங்கும் இல்லாத இடத்தில் அபிவிருத்தி சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழைய தவறுகளைக் களைந்து, நல்ல விடயங்களை உள்வாங்கி, பலமான பொருளாதாரத்தைக் கொண்ட புதிய இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உரையில் அழைப்பு விடுத்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!