அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?.
எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன.
இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி.

பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள்.
எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று எழுதியிருந்தார்.
எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது.
திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது.
ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.
நுகேகொட பேரணியில் தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது.
நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும்.
நுகேகொட பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.
ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப் புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன் கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை ஆதரிக்கவில்லை.
நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது “எக்ஸ்” பக்கத்தில் அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது.
ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது.
அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா?
கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார்.
நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது.
நிலாந்தன்.
