ரியாதில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானப் பணிப்பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பாக சவூதி அரேபியப் பிரஜையொருவருக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதராகமவினால் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கத் தயாரானபோது, பயணிகள் அனைவரும் இருக்கைப்பட்டையுடன் அமர்ந்திருக்க வேண்டும் என்ற விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சந்தேகநபர் கழிவறைக்குச் செல்ல முயன்றதனால் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், உடனடியாகத் தகவலறிந்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் தம குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
								