சமகால இலங்கை அரசியல் பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்தியொன்று தற்போது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்ஸிற்குச் சென்ற ஷிரந்தி, தனது உறவினர் டேசி பொரஸ்டையும் அழைத்துச் சென்றிருந்தார்.
அந்த விஜயத்திற்காக மொத்தம் 2 கோடி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நால்வருக்கான அறை மற்றும் உணவுக்கட்டணமாக மட்டும் 1 கோடி 61 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட சுற்றுலா பயணங்களுக்காக அதி சொகுசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதால், இதற்காக 75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஷிரந்தி தங்கியிருந்த ஹோட்டல் உலகிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் ஹோட்டலாகும். அங்கு தங்குவதனை பிரித்தானிய எலிசபெத் மகாராணி உட்பட பலர் தவிர்த்துவரும் நிலையில், பெரும் தொகை செலவில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தமை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நல்லாட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த போதும் இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள சூழலில், ஷிரந்தியின் பிரான்ஸ் விஜயம் மீண்டும் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.