யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, நீல நிற யுனிசெப் புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மைகள் அருகே கண்டுபிடிக்கப்பட்ட எஸ்-25 என அடையாளம் தரப்பட்ட என்புத் தொகுதி, சுமார் 4 முதல் 5 வயதுடைய சிறுமியொருவரைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் பிரணவன் செல்லையா, நேற்று (ஜூலை 15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அதிகாரப்பூர்வ அறிக்கையாக சமர்ப்பித்தார்.
முன்னதாக, கடந்த ஜூலை 10ஆம் திகதி, இந்த தொடர்பான மனித என்பியல் ஆய்வு அறிக்கையை 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா அவரால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை, எஸ்-48 மற்றும் எஸ்-56 என அடையாளமிடப்பட்ட மற்றைய இரண்டு என்புத் தொகுதிகளும், அதே புத்தகப்பையுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் என்புகளுடன் உடை மற்றும் எலும்பியல் அம்சங்களில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த எஸ்அடையாளங்களுடன் காணப்பட்ட மற்றொரு சிறுவர் மற்றும் சிறுமியின் என்புத் தொகுதிகளையும் மேலும் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் மன்றத்திலிருந்து அறிவுறுத்தியுள்ளார்.