கிராமப்புற மக்கள் தொகை வீழ்ச்சியை ஈடுகட்டுவது குறித்து பேசும்போது, இலங்கை பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் இழிவான கருத்தை வெளியிட்ட தென் கொரியாவின் ஜின்டோ கவுண்டி (Jindo County) ஆளுநர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo) தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

தெற்கு ஜொல்லா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கிராமப்புற மக்கள் தொகை சரிவுக்குத் தீர்வாக “இலங்கை மற்றும் வியட்நாமிய கன்னிப் பெண்களை இறக்குமதி செய்யும்” யோசனையை முன்வைத்தார்.
நேரலையில் ஒளிபரப்பப்பட்ட இவரது இந்த கருத்து தென் கொரியாவிலும் சர்வதேச அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவரது பேச்சு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும், வெளிநாட்டுப் பெண்களை வெறும் பண்டமாகச் சித்தரிக்கும் செயல் என்றும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக இலங்கை மற்றும் வியட்நாமியப் பெண்களை அவர் குறிப்பிட்ட விதம் இனவெறி மற்றும் பாலினப் பாகுபாடு கொண்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய ஆளுநர், தனது வார்த்தைப் பிரயோகம் தவறானது என்றும், எந்தவொரு நாட்டையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களுக்கு இளைஞர்களை ஈர்ப்பதில் உள்ள சவால்களைக் குறிப்பிடவே தான் அவ்வாறு பேசியதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், கிராமப்புற மக்கள் தொகை முதுமையடைந்து வருவது பெரும் சவாலாக மாறியுள்ள சூழலில், இந்தத் தேவையற்ற கருத்து விவாதம் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.
