அதிக லைக்குகள் பெற தரமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 2 சிறுவர்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் வசித்து வரும் ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஜூன் 21 ஆம் தேதி ஷதாப் காணாமலே போயுள்ளார்.
அவரது உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. ஷாதாப்பின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டு, அவரது தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டிருந்தது.

இந்த கொலை வழக்கை விசாரித்த பொலிஸார் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களைக் கைது செய்தனர். விசாரணையில் 2 சிறார்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க உயர்தர மொபைல் போன் தேவை என்பதால் ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஷாதாப்பின் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.