வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில், 6000 பொருட்கள் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (22) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகமவிடம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் முன்னைய விசாரணை ஒன்றின் போது, மீட்கப்பட்ட அனைத்து தங்கப் பொருட்களையும் பரிசோதித்து, அதில் உள்ள தங்கத்தின் தூய்மை மற்றும் எடை குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்துக்கும், அதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் (CID) நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அதிகாரசபை மேற்கொண்ட பரிசோதனையின் முடிவில், 6000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள தங்கப் பொருட்கள் தொடர்பான பரிசோதனைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், அவை முடிவடைந்தவுடன் நீதிமன்ற உத்தரவுகளின்படி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள், மன்றில் குறிப்பிட்டுள்ளனர்.