கனேடிய பொலிஸாரின் அலட்சியம்: யாழ். இளைஞனின் உயிர் பறிபோன சோகம்!

கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்தவரும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவராவார்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது உடல்நிலையைச் சரியாக ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர்.

அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், “குடிபோதையில் பொது இடத்தில் விழுந்து கிடந்ததாகக்” கூறி அவருக்கு அபராதத் துண்டினை (Ticket) வழங்கிவிட்டு, பின்னரே நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் (மதுபோதை எனக் குறிப்பிட்டதால்) அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது. இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

வைத்தியப் பரிசோதனையில், அவரது உடலில் மது அறவே இல்லை என்பதும், மூளை இரத்தக் கசிவே மயக்கத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்தத் தவறான கணிப்பு, ஒரு மனித உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

மரணத்தின் தறுவாயிலும் பிறருக்கு உதவும் நோக்கில், தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர் இணங்கியிருந்தார். இதன் மூலம் தற்போது ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே அவர் கனடியப் பிரஜாவுரிமை பெற்றிருந்ததால், அவரிடம் கடவுச்சீட்டு (Passport) இருக்கவில்லை. இதன் காரணமாக அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரைக் கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுண் மற்றும் பீல் பிராந்திய பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பா ஆகியோர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தும், ஒரு தமிழ் இளைஞருக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை எனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமான பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உடலைத் தாயகம் அனுப்ப தமிழ் அமைப்புகள் முன்வந்து உதவ வேண்டும் எனவும் அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்