இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட பல நாடுகளின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் என சுமார் 30 பேரைத் திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் நபர்களுடன் அமெரிக்க இராஜதந்திர கொள்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகளின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதாக அந்நாட்டு அரசாங்கம் கடந்த வாரம் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த அனைத்து இராஜதந்திர அதிகாரிகளும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற போதிலும், இதுவரை அவர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபிரிக்க நாடுகள் 13, ஆசிய நாடுகள் 06, ஐரோப்பிய நாடுகள் 04, மத்திய கிழக்கு நாடுகள் 02 மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் 02 ஆகியவற்றின் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு டிரம்ப் நிர்வாகத்தினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இவ்வாறான மாற்றங்கள் எந்தவொரு நிர்வாகத்திலும் இடம்பெறும் நிலையான செயல்முறை (Standard process) எனத் தெரிவித்துள்ளது.
தூதுவர் என்பவர் ஒரு நாட்டிற்கு நியமிக்கப்படும் ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரதிநிதி என்றும், தமது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நபர்களை அந்த நாடுகளுக்கு நியமிப்பது ஜனாதிபதியின் உரிமை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
