இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவைகள் இருந்தன. இதன்போது மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடைய மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்குள் ஊடுருவிய பின் அவர்கள் மூவருமா அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
செய்தி – பு.கஜிந்தன்