காசா நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனைகளில் ஒன்றின் மருத்துவர்கள், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறைவான அல்லது மயக்க மருந்து இன்றிய சூழ்நிலையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாளாந்தம், பாரிய அளவிலான உயிரிழப்புகள் நிகழ்வதாக அல்-ஷிபா மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்யும் அவுஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தலை துண்டிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி தாயின் உடலிலிருந்து ஒரு குழந்தை, போராட்டத்திற்கு மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் முக்கிய கோட்டை என்று அழைக்கப்படும், காசா நகரத்தை முழுமையாக ஆக்கிரமிக்க தங்கள் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலிய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.