இந்தோனேசியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் 65 பேரை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் 93 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இயங்கி வந்த பாடசாலை கட்டடமே இடிந்து வீழ்ந்துள்ளது.
கட்டடத்தில் ஆண் மாணவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்ததுடன், 93 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் 65 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் பெரும்பாலும் 7 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.