வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 22ஆம் திகதி கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் “தொல்பொருள் இடம்” என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பெயர்ப் பலகைகள் நிறுவப்பட்டிருந்தன.
எனினும், பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகளில் இப் பலகைகள் வைக்கப்பட்டதாகக் கூறி, பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவின் பேரில் அவை அகற்றப்பட்டன.
இதனால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அகற்றப்பட்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் மீட்டதுடன், ஒருவரை கைது செய்திருந்தனர்.
தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
