தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் தளமான ‘குரோக்’ (Grok) இணையதளம் மற்றும் அதன் செயலிக்கு இந்தோனேசியா அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
நாட்டின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாகவும், கலாசார விழுமியங்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாகக் கூறியே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய தகவல் மற்றும் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய காரணங்களாக,
ஆபாச உள்ளடக்கங்கள்: பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையில் (Deepfake/Explicit content) மாற்றிக் காட்டும் குரோக்கின் செயல்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கலாச்சாரச் சீரழிவு: இத்தகைய உள்ளடக்கங்கள் இந்தோனேசியாவின் பாரம்பரிய கலாசார மாண்புகளுக்கு எதிராகவும், சமூக ஒழுக்கத்திற்குப் பாதகமாகவும் அமைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மத உணர்வுகள்: மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களும் இத்தளத்தில் காணப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) முதல் இந்தத் தடை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து இணையச் சேவை நிறுவனங்களும் (ISPs), குரோக் தளம் மற்றும் செயலியை உடனடியாக முடக்க வேண்டும் என இந்தோனேசிய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உலகநாடுகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
xAI நிறுவனம் இந்தத் தடை குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
