கல்விச் சீர்திருத்தங்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாய் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கையூட்டல், ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய முஜிபுர் ரஹ்மான்,
“கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் கையூட்டல் தொடர்பான புகார்களை மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை; நிதி முறைகேடு மற்றும் நிதி வீணடிப்பு தொடர்பாகவும் புகார் அளிக்க முடியும். அதன் அடிப்படையிலேயே 500 மில்லியன் ரூபா நிதி வீணடிக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், இந்த நிதி வீணடிப்புக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் நியாயமான நடைமுறையைப் பின்பற்றவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் போது ஒரு ‘வெள்ளை அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட்டு, அது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
