கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து, கொடதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த மிலான் பிரியதர்ஷன என்ற கத்தோலிக்க அருட்தந்தை நேற்று முன்தினம் (24) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்களில் தம்மைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நீர்கொழும்பு வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அருட்தந்தையின் நலன் குறித்து விசாரிப்பதற்காக தேசிய கத்தோலிக்க வெகுஜன தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.
இதேவேளை குறித்த கத்தோலிக்க அருட்தந்தை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் ஆறு அதிகாரிகள் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த விசாரணைப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப் படையைச் சேர்ந்த மூன்று பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
