மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, நாட்டில் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது, நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றுகிறார்.

அதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, டீசல் மற்றும் சுப்பர் டீசலுக்கான இறக்குமதி செலவில், லீற்றர் ஒன்றுக்காக 100 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் பெற்றோலுக்கான இறக்குமதி செலவில் லீற்றருக்கு 20 ரூபாயை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 3 மாதங்களுக்கு 6,000 கோடி ரூபாயை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, மக்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கு முயற்சித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் குழுக்களுக்கான விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கமைய, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், மின்சார பாவனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில் மானியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 8,500 மில்லியன் ரூபாய் மேலதிக நிதி தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
