பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் அசம்பாவிதம்: லேசர் ஒளி, பட்டாசுகளால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் லைட்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும் மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் . சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும் சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!