நிகவரெட்டிய மருத்துவமனையில் கடந்த ஒக்ரோபர் 27ஆம் திகதி காவல்துறைப் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் கொபேகனே காவல்துறையைச் சேர்ந்த இரண்டு காவல்துறை சார்ஜென்ட்களும் ஒரு கொன்ஸ்டபிளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே காவல்துறை பாதுகாப்பில் இருந்த வேளை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் சந்தேகநபர் கடந்த ஒக்ரோபர் 25ஆம் திகதி பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு கொபேகனே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் இரண்டு நாட்கள் காவல்துறைப் பாதுகாப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அவர் ஒக்ரோபர் 27ஆம் திகதி நிகவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.ஆனபோதிலும் இவர் பலத்த காயங்களுடனேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கு முன் மரத்தில் கட்டி வைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிரதேசவாசிகள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அவர் எவ்வித காயங்களுமின்றி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
