கனடா, ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் (MPP) கௌரவ லோகன் கணபதி அவர்களுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, கௌரவ லோகன் கணபதி அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாகவும், நீண்டகால நட்புறவின் அடிப்படையிலும் இடம்பெற்ற இச்சந்திப்பு, இலங்கையின் மாகாண சபை ஆட்சி முறைமைக்கும் கனடாவின் மாகாண ஆட்சி முறைமைக்கும் இடையிலான ஒப்பீடு, அதிகாரப் பகிர்வின் நடைமுறைச் சாத்தியங்கள், மாகாணங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டமைந்தது.

இச்சந்திப்பின் முக்கியமான பேசுபொருளாக இலங்கையிலும் கனடாவிலும் நடைமுறையில் உள்ள மாகாண நிர்வாகக் கட்டமைப்புகளும் அவற்றுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும் அமைந்தன. குறிப்பாக, கனடாவின் கூட்டாட்சி முறைமையின் கீழ் ஒன்றாரியோ உள்ளிட்ட மாகாணங்கள் அனுபவிக்கும் அரசியலமைப்புச் சட்டரீதியான அதிகாரங்கள், அவற்றின் சட்டவாக்கச் சுதந்திரம், நிர்வாகப் பொறுப்புகள், நிதி அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்துடனான அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மாகாண சபைகளுக்கென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பட்டியல்கள், மாகாண நிர்வாகத்தின் உண்மையான அதிகார எல்லைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், நிதி வளங்களின் பகிர்வு, ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் போன்ற விடயங்கள் இக்கலந்துரையாடலில் முக்கியத்துவம் பெற்றன.

இலங்கையில் மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும், கனடாவின் மாகாணங்கள் நடைமுறையில் பயன்படுத்துகின்ற அதிகாரங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான விவாதங்களில் அதிகாரப் பகிர்வு, மாகாண சுயாட்சி, பிராந்திய நிர்வாகத்தின் வலுப்படுத்தல் மற்றும் மக்களின் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவை நீண்டகாலமாக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அந்த வகையில், கனடாவின் கூட்டாட்சி ஆட்சி அனுபவங்களைப் புரிந்துகொள்வதும், அவற்றை இலங்கையின் வரலாற்று, அரசியல் மற்றும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்வதும் அவசியமானதாகும் என்ற கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மாகாண அதிகாரப் பகிர்வு தொடர்பான இவ்வாறான கலந்துரையாடல்களை ஒருமுறை இடம்பெறும் சந்திப்புடன் மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியான அரசியல் மற்றும் கொள்கைசார் உரையாடல்களாக முன்னெடுப்பது குறித்தும் இருவரும் ஆர்வம் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது, கௌரவ லோகன் கணபதி அவர்கள் கனடாவில் அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை வகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்களின் நலன்களுக்காக ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் குறிப்பாக, அவர் நகரசபை உறுப்பினராகவும் (City Councillor), பின்னர் ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினராகவும் பொதுவாழ்வில் பணியாற்றிய காலங்களில், கனடாவில் வாழும் தமிழ் மக்களின் சமூக, பண்பாட்டு மற்றும் அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு வழங்கிய ஆதரவும், தமிழ் மக்களின் பங்களிப்பையும் வரலாற்றையும் அங்கீகரிக்கும் வகையில் மேற்கொண்ட முயற்சிகளும் பாராட்டப்பட்டன.
அந்த வகையில், கனடாவில் மார்கம் பகுதில் ‘வன்னி வீதி’ (Vanni Street) எனப் பெயரிடப்பட்டமை தொடர்பான அவரது பங்களிப்பும் நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.
வன்னி என்பது வெறுமனே ஒரு புவியியல் அடையாளம் மட்டுமல்ல. அது ஈழத்தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், போராட்ட அனுபவங்கள் மற்றும் மக்களின் கூட்டுச் சமூக நினைவுகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்த ஒரு நிலப்பரப்பாகும்.
அத்தகைய வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளத்தை கனடாவின் பொதுவெளியில் அங்கீகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், புலம்பெயர் தமிழ் மக்களின் அடையாளப் பாதுகாப்புக்கும் அடுத்த தலைமுறையினரிடையே தமது வரலாற்றை எடுத்துச் செல்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனச் சிறிதரன் எம்.பியினால் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் அடையாளத்தையும் வரலாற்று நினைவுகளையும் மதித்து, அவற்றை கனடாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூகக் கட்டமைப்பில் அங்கீகரிக்கச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் லோகன் கணபதி அவர்களுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இச்சந்திப்பு, இரு அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையின் மாகாண சபை முறைமை மற்றும் கனடாவின் கூட்டாட்சி ஆட்சி முறைமை தொடர்பான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு பயனுள்ள தளமாகவும் அமைந்தது.
சந்திப்பின் நிறைவில், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு கௌரவ லோகன் கணபதி அவர்கள் அன்பையும் நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். இச்சந்திப்பு, இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, அரசியல் நட்புறவு மற்றும் அனுபவப் பரிமாற்றத்தின் அடையாளமாக அமைந்தது.
