முன்னாள் சபாநாயகரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வாகன விபத்து தொடர்பான விசாரணைகளில், கடமை தவறியதாகக் கூறப்படும் சப்புகஸ்கந்த காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயற்பட்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முறையான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை விசேட விசாரணைப் பிரிவிற்கு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனம் அண்மையில் மோதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
