லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், ஒரு காலத்தில் அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தகவலை அவரது அரசியல் குழுவின் தலைவர் மற்றும் லிபிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளன.

லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிந்தான் (Zintan) நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு முன்னதாக அந்த வீட்டிலிருந்த கண்காணிப்பு கெமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், அவர் அல்ஜீரியா எல்லையோரம் கொல்லப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.எனினும், ஜிந்தான் நகரில் நடந்த மோதலில் அவர் உயிரிழந்ததாகவே பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

1972 ஆம் ஆண்டு பிறந்த சைஃப் அல்-இஸ்லாம், தனது தந்தை முஅம்மர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார்.

லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனாமிக்ஸில் பயின்ற இவர், ஆரம்பகாலத்தில் லிபியாவை நவீனமயமாக்க விரும்பும் ஒரு சீர்திருத்தவாதியாக மேற்கத்திய நாடுகளால் பார்க்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டில் நேட்டோ ஆதரவுடன் நடந்த கிளர்ச்சியின் போது, போராட்டக்காரர்களை ஒடுக்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கிளர்ச்சியின் முடிவில் இவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு, சைஃப் அல்-இஸ்லாம் ஜிந்தான் நகரில் பிடிபட்டு சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவரைத் தேடி வந்தது. 2015 ஆம் ஆண்டு திரிபோலி நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்த போதிலும், 2017 ஆம் ஆண்டில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த சைஃப் அல்-இஸ்லாம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அரசியலில் நுழைய முயன்றார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது அவரது மறைவு, ஏற்கனவே ஆயுதமேந்திய குழுக்களால் பிளவுபட்டுள்ள லிபியாவில் மேலும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து லிபிய அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!