ராஜபக்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ரணில் விக்கிரமசிங்க மீது சட்டம் பாய்வதற்கு முன்னர் அவருடன் இருந்தவர்கள், ரணிலை நெருங்க முடியாது, அவர் மிகப் பெரிய சர்வதேச இராஜதந்திரி, மிகவும் நரித்தந்திரமானர் அவருடன் விளையாட முடியாது என்றெல்லாம் கூறினார்கள்.

இவ்வாறு கூறியவர்கள் எல்லோருக்கு இப்போது தெரியவந்திருக்கும். ரணிலே கைது செயப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்கதை. எனவே எதிர்வரும் நாட்களிலும் கைதுகள் இடம்பெறும்.
ஆகையினால் இந்த நாட்டில் மோசடி செய்த எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அது ரணிலாக இருந்தாலும், ராஜபக்சர்களாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.
மக்களின் பணத்தை சூரையாடியவர்கள் படிப்படியாக சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியாது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்னும் ஒரு சில வாரங்களில் வடக்கிலுள்ள அரசியல் வாதிகளும் கைது செய்யப்படுவார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் தேடி வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.