அரசியல் முதிர்ச்சியும், சாணக்கியமும், எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவ ஆளுமையும் மிக்கவராக, தன் இறுதிக்கணம் வரை தமிழ்த்தேசியத் தளத்தில் பயணித்த அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் வெற்றிடம்,
ஈழத்தமிழர்களின் இனவிடுதலை நோக்கிய அறவழிப் போராட்டப் பயணத்தில் காலவெளியால் நிரப்ப முடியாத வெற்றிடம் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் இன்றையதினம் கட்சியின் மாவட்டக் கிளைப் பணிமனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, நினைவுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், ஆசிரியருமான அருணாசலம் சத்தியானந்தம், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உப தலைவரும் மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராஜா குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்ததுடன், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், மேனாள் உறுப்பினர்கள், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் கிளைகளின் நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



