தமிழகத்தில் இராணுவ இரகசியங்களைத் திருடுவதற்குத் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்த இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கு நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இராமநாதபுரம், உச்சிப்புளி பகுதியில் மலேசியக் குடியுரிமை பெற்ற ஒருவர் நடத்திய, விருந்தகத்தில் பணியாற்றிய இலங்கை, கொழும்பைச் சேர்ந்த தம்பதியினர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், ஆதார் அட்டை மற்றும் சிம் அட்டைகளை பெற்றுள்ளனர்.
அத்துடன், அந்த ஆவணங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தானி ஒருவரிடம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர், அதை பயன்படுத்தி இராணுவ இரகசியங்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை தம்பதி, விருந்தக உரிமையாளர் மற்றும் பாகிஸ்தான் நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
எனினும், இராணுவ இரகசிங்களை திருடிய பாகிஸ்தானியர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை தம்பதியினர், திருச்சியிலுள்ள இலங்கை கைதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
