இன்று வரலட்சுமி நோன்பு நாள். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற சிறந்த நாளாகக் கருதப்படும் இந்நாளில், சில புனிதப் பொருட்களை வாங்கி வைப்பது செல்வ வளத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.
1. நெல்லிக்கனி

நல்ல தரமான பெரிய நெல்லிக்கனியை பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் படத்துக்கு முன் வைத்து வணங்குவது சிறப்பு பலனளிக்கும். புராணக் கதைகளின்படி, குபேரரின் வறுமை நீங்க நெல்லி மரத்தை வளர்த்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், நெல்லிக்கனி லட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் உகந்ததாக கருதப்படுகிறது.
2. கல் உப்பு

வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து வைப்பது செல்வத்தை அதிகரிக்கும் என பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இந்நாளில் வாங்கப்படும் கல் உப்பு, வீட்டு வளத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
3. மஞ்சள் ரவிக்கை மற்றும் மஞ்சள் கிழங்கு

மஞ்சள் நிற ரவிக்கை துணி அல்லது துண்டுடன் குண்டு மஞ்சள் கிழங்கை மகாலட்சுமி தாயாரின் முன் வைத்து வழிபட வேண்டும். பின்னர், இதை சுமங்கலி பெண்களுக்கு வழங்கினால் கலச வழிபாட்டின் முழு பலனையும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
வழிபாடு செய்ய முடியாதவர்களும், குறைந்தபட்சம் இந்த மூன்று பொருட்களை வாங்கி வணங்கி, குபேர சம்பத்துடன் செழிப்பான வாழ்வு பெறலாம்.