மின்சார பொறியாளர்கள் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 4:15 மணி முதல் அனைத்து பணி விதிமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக தீர்மானம் செய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மின் தடையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.
இந்த தீர்மானம் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை எனவும், அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்துபூர்வமாக அறிவித்த பின்னரே எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
வேலை விதிமுறைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்கத்தின் தீர்மானத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களை கடிதங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்து பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளும் நிலையான எட்டு மணி நேர வேலை காலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதற்கு மேல், அவசரம் எதுவாக இருந்தாலும், எந்த பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணியும் நடைபெறாது,” என அவர் தெரிவித்துள்ளார்.