இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (18) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஓகஸ்ட் 30 ஆம் திகதி முதல் விசாரணைகள் மூலம், 7 டி-56 ரக துப்பாக்கிகள், 1 டி-81 ரக துப்பாக்கி, 06 கைத்துப்பாக்கிகள், 9 ரிவால்வர்கள் மற்றும் 2 பிற ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ”சிலர் செவ்வந்தியை அழைத்துச் சென்ற பின்னர் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் மூலம் சில அரசியல்வாதிகளின் தொடர்புகளை நாங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளோம். அது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
