அமெரிக்க மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், கடன் அட்டைக்கான வட்டி விகிதங்களை வருடத்திற்கு 10 சதவீதமாகக் குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அமெரிக்கர்கள் 20% முதல் 30% வரை வட்டி செலுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உச்சவரம்பு அமுல்படுத்தப்பட்டால், அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டொலர் வட்டிப் பணத்தைச் சேமிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சுமார் 19.5 கோடி அமெரிக்கர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் செலுத்தும் சராசரி வட்டி விகிதம் 19.6% முதல் 21.5% வரை உள்ளது.
இந்த நடவடிக்கைக்கு குடியரசுக் கட்சி செனட்டர் ரோஜர் மார்ஷல் மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களான பேர்னி சாண்டர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோரும் வெவ்வேறு மட்டங்களில் ஆதரவு அல்லது ஒத்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த திட்டத்திற்கு வங்கிகள் மற்றும் கடன் அட்டை நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதன்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், அதிக அபாயமுள்ள வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதை வங்கிகள் நிறுத்திவிடும் என்றும் இதனால் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடனைப் பெற கந்துவட்டிக்காரர்களை நாட வேண்டிய நிலை ஏற்படும் என வாதிட்டுள்ளனர்.
வட்டி வருமானம் குறைந்தால், கடன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் ‘ரிவார்ட்ஸ்’ (Rewards) மற்றும் ஏனைய சலுகைகளை வங்கிகள் இரத்து செய்யக்கூடும்.
எனினும், வட்டி குறைந்தாலும் வர்த்தகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூலம் வங்கிகள் தொடர்ந்து இலாபகரமாக இயங்க முடியும் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ட்ரம்ப் இந்த மாற்றத்தை ஜனாதிபதி ஆணை மூலம் செய்வாரா அல்லது புதிய சட்டம் மூலம் கொண்டு வருவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தநிலையில் “அமெரிக்க மக்களைச் சுரண்டுவதற்கு இனி கடன் அட்டை நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம்,” என டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
