டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பொகவந்தலாவை பிரதேச செய்தியாளரின் கையடக்கத் தொலைபேசியை பறித்து அதில் இருந்த காணொளிகளை அழித்த அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிளின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்தமைக்கு ஊடகங்களே பங்காற்றியிருந்தன.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பெற்றசோ தோட்டத்துக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த எமது ஒன்றியத்தை சேர்ந்த பொகவந்தலாவை பிரதேச செய்தியாளர் ஒருவர், தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அங்கு நடக்கும் சம்பவங்களை ஒளிப்பதிவாக சேகரித்துக்கொண்டிருந்த போது சீருடையில் இருந்த அட்டன் பொலிஸ் தலைமை காரியாலய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்து அக்காட்சிகளை அழித்துள்ளார். தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும் அதை கண்டுகொள்ளாத மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் இந்த கொலைச் சம்பவத்தில் உன்னையும் தொடர்பு படுத்தி கைது செய்து விடுவேன் என மிரட்டும் தொனியில் கதைத்துள்ளார்.
எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள், கடத்தல் சம்பவங்கள் , அச்சுறுத்தல்கள்,கொலைச்சம்பவங்கள் புதியனவல்ல. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வோம் என்றும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற சகல குற்றச்சம்பவங்கள் குறித்தம் விசாரணை செய்து உரிய தரப்பினரை சட்டத்தின் முன்பு நிறுத்துவோம் என்ற உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையெடுப்பதற்கான சட்ட ஆலோசனைகளை நாம் பெற்றுள்ளோம். அதே வேளை சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடத்தைகள் எமக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. யாருடைய தூண்டுதலின் பேரில் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்ற விடயங்களை விசாரணைகள் மூலம் உரிய தரப்பினர் வெளிக்கொணர வேண்டும். இது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சு, பொலிஸ்மா அதிபர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவு ஆகிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்தற்கு நாம் தீர்மானித்துள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
