பாம்பனில் அதிரடி: இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்தல் செய்ய முயன்ற மதுரை நபர்கள் சிக்கினர்!

ராமேஸ்வரம்: பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு வரப்பட்ட 120 பந்தய புறாக்களை கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த இருவரைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்த முயன்று பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் நடந்த அதிரடி கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்திருப்பதால், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று நள்ளிரவு முதல் கியூ பிரிவு போலீசார் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் சாலைப் பாலம் ஆகிய பகுதிகளில் மறைந்திருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

காரில் சிக்கிய புறாக்கள்

இன்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று, பாம்பன் சாலைப் பாலத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. அதை கவனித்த போலீசார், காரைச் சுற்றி வளைத்து அங்கிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் காரைத் திறந்து சோதனையிட்டனர்.

அப்போது, காரின் உள்ளே 6 இரும்பு கூடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 பந்தய புறாக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, காரையும் பந்தய புறாக்களையும் போலீசார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய நாட்டுப்படகு

காரில் வந்த மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காகவே மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையில், காரைப் பறிமுதல் செய்த பின் கியூ பிரிவு போலீசார் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதிக்கு சோதனை செய்யச் சென்றபோது, அங்குக் காத்துக்கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்று போலீசாரைக் கண்டதும் கடலுக்குள் அதிவேகமாகத் தப்பிச் சென்றது. தப்பியோடிய அந்த நாட்டுப்படகு குறித்து மரைன் போலீசார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திப் படம் & தகவல்: பாறுக் ஷிஹான்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!