நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் முக்கிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1948 முதல் இன்று வரை தொடரும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை” முறியடிக்க, தமிழ்த் தேசிய உணர்வை தற்காப்பு அரணாகக் கொள்ளுமாறு அந்த அறிக்கை தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களைத் தோற்கடித்ததாக நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு, தமிழர்கள் தங்களின் இன அழிப்பு வரலாற்றையும், தேசிய உணர்வையும் எப்போது இழக்கிறார்களோ, அப்போதுதான் சிங்கள-பௌத்த மேலாதிக்கம் முழுமையான வெற்றியை அடையும் என எச்சரித்துள்ளது.

“தமிழர்களை தனித்துவமான அடையாளமற்றவர்களாக மாற்றி, ‘சிறீ லங்கர்கள்’ என்ற ஆக்கிரமிப்பு அடையாளத்திற்குள் கரைப்பதே பேரினவாதத்தின் இறுதி இலக்கு” என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1948-இல் ஆங்கிலேயர்கள் வழங்கிய சுதந்திரமானது தமிழ்த் தேசத்திற்கு உண்மையான விடுதலையைத் தரவில்லை. ஆங்கிலேயர்களின் குறைபாடுள்ள கொள்கையினால் தமிழர்களின் இறைமை, அவர்களின் சம்மதமின்றியே சிங்கள-பௌத்த அரசுக் கட்டமைப்பிற்குள் கைமாற்றப்பட்டது. இதன் விளைவாக கடந்த 78 ஆண்டுகளாக தமிழர்கள் ஒரு “உள்நாட்டு காலனித்துவ” (Internal Colonialism) நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என அறிக்கை விளக்குகிறது.

சமீபத்திய தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) தமிழர் தாயகத்தில் பெற்ற வாக்குகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவில் சமூக அமையம், இது தமிழ்த் தேசிய உணர்வில் ஏற்பட்ட ஒரு ‘சறுக்கல்’ எனக் குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த சக்திகள் இன்று புதிய முகமூடிகளுடன் வந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் அவர்களுக்கு அளித்த வாக்குகள், தமிழ்த் தேசியம் கைவிடப்படும் என்ற தவறான பிம்பத்தை பேரினவாதிகளுக்குக் கொடுத்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளது.

இன அழிப்பு வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தவும், தேசிய உணர்வை வலுப்படுத்தவும் பின்வரும் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அமையம் கோரிக்கை விடுத்துள்ளது:

  1. முள்ளிவாய்க்கால் கஞ்சி: வீடுகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சி காய்ச்சி, அந்த வலியை பிள்ளைகளுக்குக் கதைகளாகக் கடத்துதல்.
  2. மே 18 சுடர் ஏந்துதல்: வீடுகளிலும் பொது இடங்களிலும் உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தல்.

3.முள்ளிவாய்க்கால் கூடுகை: மே 18 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் பங்கேற்றல்.

4.குருதிக்கொடை: நினைவு வாரத்தில் இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்தல்.

  1. தொடர் நினைவேந்தல்: பாடசாலைகள், கோவில்களில் வாரம் முழுவதும் நினைவேந்தல் உரைகளை நிகழ்த்துதல்.
  2. மாணவர் போட்டிகள்: இன அழிப்பு மற்றும் தேசியம் குறித்து பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளை நடத்துதல்.
  3. புகைப்படக் கண்காட்சி: இன அழிப்பின் சாட்சியங்களைப் காட்சிப்படுத்துதல்.
  4. சிரமதானப் பணிகள்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
  5. கிராமிய நினைவுச் சின்னங்கள்: அந்தந்த ஊர்களில் நடந்த படுகொலைகளைச் சித்தரிக்கும் நினைவுத் தூபிகள் அல்லது கல்வெட்டுகளை நிறுவுதல்.

“முள்ளிவாய்க்காலில் எமது உரிமைகளுக்கான ஆயுதங்கள் மௌனித்திருக்கலாம், ஆனால் எமது இருப்பைப் பாதுகாப்பதற்கான தமிழ்த் தேசிய உணர்வு என்ற அரண் ஒருபோதும் தகரக்கூடாது” எனத் தெரிவித்துள்ள இந்த அறிக்கையில் இணைப் பேச்சாளர்கள் பொ. ந. சிங்கம், விஜயகுமார் மற்றும் கு. குருபரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நினைவுகளே எமது பேராயுதம் என்பதை உணர்ந்து, தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த நினைவு நாளை ஒரு தேசிய கடமையாகக் கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!