குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ ஆலோசனையின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, முன்னாள் ஜனாதிபதியின் இதயம் மற்றும் சிறுநீரகங்களின் நிலையில் மாற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நீரிழப்புடன் கடுமையான தலைவலியும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சிகிச்சை வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை சிறப்பு வைத்தியர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நாளை விஷேட அறிக்கை வெளியிடப்படும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், தற்போது அவர் நல்ல மனநிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.