த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தன.

இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் கதிரைகளும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 கதிரைகளும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.